பக்கங்கள்

கோவத்திலே பேசிட்டேன்….. (கட்டுரை)

லகில் உறவில் - உணர்வில்…..

இரு இரு படுக்காளி வெயிட்..!! வெயி்ட் வெயிட் எ நிமிட்!, - ஜில் ஜில்ன்னு டைமிங் வர்ற மாதிரி, வில் வில்ன்னு ரைமிங் வர்ற மாதிரி எழுதிட்ட, நீ எதைப்பத்தி சொல்ற….

ஃபர்ஸ்ட்…. உலகில்…! ஓ! ஒக்கே..…. உலகத்தை பத்தி சொல்ற… ஓக்கே ரைட்டு. அப்புறம் உறவில்.! - அதாவது ஒன் டூ ஒன், ஒன் டூ மெனி, மெனி டூ மெனி… அப்படின்னு அக்கா தம்பிக்கு இடையில, அப்பா அம்மாவுக்கிடையில, புருசன் பொண்டாட்டிக்கு இடையில, தலைவன் தொண்டர்களுக்கிடையே, ஒரு குரூப்புக்கும் இன்னொரு குரூப்புக்கும் இடையில….…. ரைட்டு… ஒக்கே… அப்புறம் உணர்வில்.? அதாவது ஃபீல்…. கோபம், துக்கம், சந்தோஷம்.. மெர்சல்..… விவேகம்….. இப்படி… ஒக்கே ’கேரி ஆன்…’

உலகில் உறவில் உணர்வில், கொட்டப்படும் வார்த்தைகளுக்கு, அது தேனாக இருந்தாலும் சரி, தேளாக இருந்தாலும் சரி……

ஆஹா…. என்ன ஒரு வார்த்தை செலக்‌ஷன்… கொட்டுறது…..!!! அதுல தேன் தேள்ன்னு ’ஃபோனடிக் பஞ்ச் வேற…’ என்னா.! சுகம்யா நம்ம தமிழு……

ஹலோ.. நான் படுக்காளி பேசுறேன்..! யாருங்க நீங்க?. கட்டுரைக்கு நடுவுல பூந்துகிட்டு கமெண்ட் அடிச்சுக்கிட்டு, நடுவீட்டுல நாட்டாம பண்ணிகிட்டு… என்ன என் வேலைய செய்ய விடுங்க.. நீங்க உங்க வேலைய பாருங்க - என அவரிடம் பை…பை சொல்லிவிட்டு நம் வேலையை தொடருவோமே…

உலகில் உறவில் உணர்வில், கொட்டப்படும் வார்த்தைகளுக்கு, அது தேனாக இருந்தாலும் சரி, தேளாக இருந்தாலும் சரி…… அர்த்தம் இல்லை… அர்த்தம் இல்லவே இல்லை.

கோபத்தில் விழும் வார்த்தைகளுக்கும்…. போதையில் தள்ளாடும் தமிழுக்கும்….. மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் ஆங்கிலத்துக்கும்…..  அர்த்தம் இல்லை. சரிதான், புதுசா ஒரு டிக்‌ஷனரி தான் போடணும். உணர்ச்சி மிகும் தருணத்தில் சொல்லப்படும் வார்த்தைகளுக்கு, அதன் உண்மைப் பொருள் பொருந்தாது. 

கைக்கு கிடைக்கும் ஒரு கம்பை தேடி பாம்பை அடிப்பது போல், அப்போது நம் கையில் கிடைக்கும் வார்த்தையை கொண்டு உணர்ச்சியின் உச்சத்தின் மிச்சத்தை சொல்வதனால் தான் இப்படி அர்த்தம் இல்லாமல் போகிறது.

அது ஏன். எதனால் இப்படி நடக்கிறது…. ஏன் இப்படி அர்த்தம் இடம் மாறி விடுகிறது.

இதே பாம்பு செத்து போனது என்று வைத்துக் கொள்வோம். அப்ப சௌகரியமா நின்னு நிதானமா, நமக்கு தோதான ஒரு கம்பை எடுத்துக்கிட்டு போவோம் இல்லையா.

உணர்ச்சி வசப்பட்டு, அர்ஜெண்டாய் பேசுவதில் இரண்டு அடிப்படை காரணங்கள் உண்டு.

ஒன்று, இப்ப.. இப்ப…. இப்ப சொல்லியாகணும். ’ஒரு செகண்ட் கூட’ வெயிட் பண்ணக்கூடாது எனும் அவசரம்.

இரண்டாவது காரணம் – பயம்!, பயம் நிறைய காரணங்களால் வருகின்றன. உதாரணத்துக்கு எங்க ஏதாவது ஆகி, இந்த உணர்ச்சி மாறிடுமோ….”அதுக்குள்ள சொல்லிறனும்ல..” - என்பது கூட ஒன்று. என் இருப்புல இரும்பு விழுந்துருமோ, என் சுயம் காயப் படுமோ, என் அடையாளம் காணாமல் போகுமோ.. இப்படி ஏதோ ஒரு வகையில் பயம்… பயங்கர பயம்…

எனவே, இந்த இரண்டையுமே நம்மால் பகுக்க முடிந்தால், உணர முடிந்தால், மனித மனதை புரிய நினைத்தால்….. உணர்ச்சியின் வீரியத்தோடு  நாமும் கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாம்.

சரி, உணர்ச்சியில் சொல்லப்படும் வார்த்தைக்கு அர்த்தம் இல்லைதான். இல்லவே இல்லைதான். ஆனாலும், சொல்லிவிட்டு,….  உடனே… வெகு உடனே…… ‘நான் தெரியாம சொல்லிட்டேன்..  சாரி!’ எனும் வார்த்தையும் அது போலத்தான்……………….. அர்த்தமே இல்லாதது.

நம்மில் சிலருக்கு சாரி சொல்வது கஷ்டம், ரொம்ப கஷ்டம். அதுவே ஒரு சிலருக்கு… சாரி சொல்வது ரொம்ப ஈசி…. ஒண்ணு என்ன ஒம்போது சாரி சொல்றேன்… நீ எப்போ சொல்லணும்ன்னு சொல்றீயோ.. அப்ப சொல்றேன்.. அதுக்கென்ன போச்சு… என்பதாய் வரும் ’அர்ஜெண்ட் சாரிகள்…’ அர்த்தமே இல்லாதவை.

அவசரப்பட்டு வரும் சாரியில் ஒன்று நிச்சயம். உனக்குத் தேவை ஒரு வார்த்தை தானே.. வச்சுக்கோ… இந்தா…. வா… சாப்பிடு என அழைப்பது. போல் ஒரு சொல் கோர்வை அவ்வளவுதான். ஆனால் சாரிக்கான அர்த்தம் அது இல்லை….அதன் அர்த்தம் வேறு. அதனால் தான் சிலரால் சாரி சொல்ல முடிவதில்லை… இன்னும் சிலருக்கு உயிர் போய் விடுவது போல இருக்கும். அது ஏன்…?

தவறு என உணரப்பட, தன் சுயத்தை அலசி சுயம்புவாக… காலம் அவசியம். தவறு உணரப்பட்டால், மாற்றம் நிகழ வேண்டும்.. இந்த இரண்டும் நடக்கவில்லையெனில்… சாரி…. எனும் வார்த்தைக்கு…. ஸாரி போல அழகு இல்லை. ஆனாலும் கட்ட வேண்டிய விதத்தில், ஸாரி கட்டும் போது ஜம்முன்னு இருக்கும்….. சாரி தான் பெஸ்ட் என்பது தமிழன் இல்லாமல் வேறு யாருக்குத் தெரியும்.

உலகில் உறவில் உணர்வில்….. வில்… வில்…. வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல, வார்த்தைகளை திரும்ப பெற முடியாது. கடைசியில் நம் கையில் இருப்பது வெறும் வில் தான்… அதாவது தமிழ் வில் தான் இருக்கும். இதை உணரவும் ஆழமாய் உரைக்கவும்… ஆங்கில வில்…. (WILL POWER) வேண்டும்.

செம போதைப்பா….. என்னவோ சொன்னேன்… ஆனா தெரியாமல் சொல்லி விட்டேன்……  நான் சொன்னதுக்கு அர்த்தம் இல்லை.…. இது ஒத்துக் கொள்ளக் கூடியது என்றாலும். வார்த்தை பிரயோகத்தில் அர்த்தம் இல்லையென்றாலும், அது அம்மனிதரைப் பற்றிய குணாதிசயங்களை பல் இளித்துக் கொண்டு வெளியில் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும்.

அது, சிந்திப்பவரின் மனத் தளம், சிந்திக்கும் பாங்கு, சிந்தனையின் விதம் என அத்தனையையும்… மொத்தமாய் வெட்ட வெளிச்சமாகிவிடும். உதாரணத்துக்கு பார்ப்போமே,

காசு ஏமாந்த ஒருவர் திட்டும் போது எப்படி திட்டுகிறார்… நாமும் பல சந்தர்ப்பங்களில் கேட்டது தானே.. உதாரணத்துக்கு சில கீழே.

  1.    நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டேடா, நாசமா போயிருவ… வெளங்காம போயிருவ… உருப்படவே மாட்ட
  2. என் காச எடுத்த பாரு… உன் கையில குஷ்டம் வந்து புழுத்து சாவ, ….
  3. சீ… நீயெல்லாம் மனுசனா.. உன்னையெல்லாம் நம்பி கொடுத்தேன் பாரு, என் புத்தியை சாணிய கரைச்சு ஊத்தி, பழைய செருப்பால அடிக்கணும்.


மேற்க்கூறிய … கூரிய தமிழ் வசவுகளுக்கான, மேலும் சில ஆப்ஷன்களையும் அதற்கான விரிவான விளக்கங்களையும், அது சொல்லும் சிந்திப்பவரின் குணாதிசயம் பற்றியும் தாங்களே யோசிப்பீர்கள் என்பதால், சில மட்டும் குறிப்பில்.

எல்லா வார்த்தைகளும் தடித்து, வலி உண்டாக்கும் கூரோடு இருந்தாலும் கூட, ஒன்றும் இரண்டும்… சொல்பவர் – ‘வினையாற்றுபவர்’. (REACTIVE) எனும் மனித வகை சார்ந்தது. அதுவே மூன்றாவது எண்ணில் குறிப்பிட்டுருக்கும் நபர் (PRO ACTIVE) தன் சார்பு நிலை கொண்டவர். எந்த நிகழ்வையும் தன் தோளில் சுமந்து, தன் கண்ணால் கண்டு, தன்னை மாற்ற முனையும் சிந்தனை கொண்டவர்.

காந்தியடிகள் சொன்னது போல ‘BE THE CHANGE…. THAT YOU DESIRE. மகாத்மா உதாரணம் காட்டியதால் அவரை நாம் உத்தமர் என ஸ்டாம்பு,,,, குத்த வேண்டியதில்லை… அவரது பழைய பிஞ்சு போன செருப்பு, சாணிய கரைச்சு ஊத்து… எனும் காட்சி விவரணை எதற்க்கும் சளைத்ததும் இல்லை.

அது போல, முதலும் இரண்டும் சொல்லும்… ‘வினையாற்றுபவர்’, நான் தப்பு பண்ணல… தப்பு பண்ணினது நீ… நீ நல்லா இருக்கக் கூடாது என முடிவெடுத்தாலும்… இரண்டாம் நபர் விவகாரமானவர். அவர் புழுத்தலையும், சீழ் வடிதலையும் மனசுக்குள் ஏற்றிக் கொண்டவர். அவர் சிந்திக்கும் தளமும், விதமும் முன்னவரில் இருந்து மிகவும் மாறுபட்டு இருக்கும்.

இப்படி…. கோபத்தில் விழும் வார்த்தைகள் கூட அதன் தொடக்கப் புள்ளியைச், ஆணி வேரை, அந்தரங்கத்தின் கிடப்பை அரங்கத்தில் சொல்லும் வீரியமிக்கவையாகவே உள்ளன.

செய்தித் தாள்களில் வழக்கமாய் ஒரு செய்தி வரும். அடையாளம் காணப்படாத ஒரு சடலம் கண்டெடுக்கப் பட்டதாய்…. பின் அதே செய்தியின் தொடர்ச்சியாக ஒரிறு நாட்களில் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது கொலையுண்டவரின் நண்பர் தான் கொலையாளி என்றும் வரும். மது அருந்தும் போது நண்பர்களிடையே ஏற்பட்ட சண்டைதான் கொலைக்கான காரணம் எனவும் வரும்.

தினம் ஒரு செய்தி இப்படி வருகிறது. நானும் வியந்து, அதெப்படி, அவர்கள் நண்பர்கள், போதையில் இருக்கிறார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்… ஏதோ ஒரு உணர்ச்சியின் வேகத்தில் கத்தியை எடுத்து…. எப்படி  குத்த முடியும்… ஜஸ்டிஃபை செய்ய முடியவில்லையே என குழம்பியிருக்கிறேன்…. இப்போது உணர்வைக் குறித்து சிந்திக்கும் போது இப்படி தோன்றுகிறது.….

மூன்று ஆப்ஷன்களாக மேலே சிந்தித்த வசவுச் சொற்களில், மேலும் ஒன்றை பொருத்திப் பார்ப்போமே…
4.   
  • 4.     பணம் காசுக்குத்தான செஞ்ச… இதுக்கு பேசாம உங்கொம்மாவ _______

(இதற்கு மேல், எழுத என்னால் முடியாது. அச்சில் ஏறத்தகாத சொற்களை சொல்லவோ… அல்லது அவன் சொன்னான் .. இதைத்தான் சொன்னான் என இன்றைய பின் நவீனத்துவ மொழியோ… கேடு கெட்ட எந்த வார்த்தைகளையும் திரும்பிக் கூட சொல்வது எனக்கு ஏற்புடையது அல்ல… என் மாண்புக்கு அந்த மரபும் இல்லை.)

ஆனால், இப்படி ஒரு நாலாந்திர சிந்தனை இருந்து… மேலே குறிப்பிட்டது போல அது போதையில் சொல்லப்பட்டால், அதிலும் கேட்பவன் எங்கூரு.. தூத்துக்குடி காரனாக இருந்து…. அவன் கையில் கத்தியும் இருந்திருந்தால்…

என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

உணர்வும், அது நிகழ்த்தும் நாடகங்களும் வாழ்க்கையில் வினோதமானவை. இன்றைய நிறைய வாழ்க்கை குளறுபடிகளுக்கு அடிப்படை காரணம் இத்தகைய உணர்வின் வெளிப்பாடு மீறல்களே….

மனம் ஒரு தங்கத்தட்டு…. அதை மலரால் அலங்கரிப்பதா இல்லை… மலமா எனும் ,மிகப்பெரிய சாய்ஸ் நம்மிடம் தான் இருக்கிறது. அலங்கரிக்கப்பட்ட அந்த தங்கத்தட்டு….. நம் மனசுதான்… நம்மிடம் பழகுபவருக்கு பந்தி வைக்கப் போகிறது. அது தான் அவரை நம்மிடத்தில் வர வைக்கிறது.

மலம் பார்த்தால், முகம் சுளித்து… ஓடும் கூட்டம் தானே இங்கு உண்மை.. இல்லை… நான் மலம் வைத்துக் கொள்கிறேன்.. நீ வா இங்க குளுகுளுன்னு காத்து வரும்… சாப்பிடு என்றால் அது நடக்காது.

விவகாரமான ஒரு வார்த்தைக் கோர்வை நம் உணர்வு மீறலில் வெளிப்பட்டால் .. எங்கிருந்து இந்த வார்த்தையை கற்றுக் கொண்டேன்… ஏன் இதை என் சிந்தனையில் அனுமதித்தேன்.. அதை எப்படி வெளியேற்றுவது இது போல், சிந்தனைகளை கற்றுத்தரும் சாக்கடைகளை உடன் விட்டு விலகுவது எனும் தீர்மானங்கள் தான் உங்கள் நேரத்தின் முக்கியத்துவத்தை உங்களுக்கு உணர்த்தும்….

இப்படி தெளிவாக எடுக்கும் முடிவு தான்…. உங்களுக்கு நல்லது.

தாங்கள் செல்ல வேண்டிய இலக்கின் தூரம் இலகுவாகும்….

அதுவே உங்கள் இலக்கை அடையச் செய்யும் இறகுகளை உங்களுள் முளைக்கச் செய்யும்.

வாழ்த்துக்கள்.. அன்புடன்…