பக்கங்கள்

லோ கிளாஸ்


எங்கள் ஊர் அன்றைக்கு சந்தோசமாய் விடிந்தது. கோழி கூட அவசரமாக சோம்பல் முறித்து விட்டு, புது ராகத்தில் பாடியது. ஊரின் அத்தனை சுவர்களும் புதிய வண்ணத்தில் போஸ்டர் தாங்கியிருந்தன. பத்திரிக்கை விளம்பரம், ஊரெல்லாம் போஸ்டர், காதை கிழிக்கும் பாட்டு, தோரணங்கள் என அதகளம். மேட்டரு இதுதான். புதுசா இன்னிக்கு ஒரு தியேட்டர் திறக்குறாங்க.... பேரு மினி சார்லஸ்.
திரைப்படமும் தியேட்டரும் நம் எல்லோருக்கும் பிடித்தது தானே. விடலை பயலுக, ஸ்கூல் போற குட்டி பிள்ளைங்கன்னு மட்டும் இல்லாம, பெத்தவங்க பெரியவங்க எல்லாம் கூட குஷியா இருக்காங்க.

புது திரை, புது மெஷின், புது சீட்ன்னு சினிமா பாக்குறதே புது அனுபவமா இருக்கு. படமும் ரொம்ப தெளிவா தெரியுது, துடைச்சு விட்ட மாதிரி இருக்குடா.... அச்சு குண்டா நேர்லயே பாக்குற மாதிரி இருக்குடா. என நமக்கு முன் போய் வந்தவர் பெருமையாய் சிலாகித்து சொன்னார்கள்.

பர்ஸ்ட் கிளாஸ் டிக்கட் மெத்து மெத்துன்னு பஞ்சு வைச்சு தைச்சிருக்காங்கடா.

சிவப்பு கலர்ல, சூப்பரா இருக்குது என்றவனை அப்படியா என்றதற்கு.... தெரியும்டா நீ நம்ப மாட்டேன்னு... அதுக்குத்தான் இருக்கட்டுமேன்னு கிழிச்சி கொண்டாந்துருக்கேம் பாரு.... என ஒரு சின்ன பீஸ் காண்பித்தான் என் நண்பன். அடப் பாவி, கிழிச்சிட்டியா.. ஏண்டா இப்படி இருக்க... உன்ன மாதிரி எல்லாரும் தொடங்கிருவாங்களே....

படம் போரடிச்சா, சீட்ட போட்டு பிறாண்டி புடுவானுகளே என அக்கறையோடு சொன்னேன். மேலும் தொடர்ந்து, ஹும்... இன்னும் எத்தனை நாளக்கு இதை விட்டு வைப்பாங்கன்னு பார்ப்போம், என்ற என் கவலையில் உண்மை இருந்தது.
கண்ண மூடிக்கிட்டு பாட்ட கேட்டு பாரு, ஒரு குர்ரு சவுண்ட் / இரைச்சல் இல்லடா. என பல பல விமர்சனங்கள் புதிய தியேட்டரைப்பற்றி.

நிற்க, திரைக்கு நேர் எதிரில் நம் முதுகுப் பக்கம், பளிரென்று ஒளி வரும் ஆப்பரேட்டர் ஒட்டைக்கு பக்கத்தில் ஒன்று புதியதாய் கவனத்தை கவர்ந்தது. அது என்னடா புதுசா இருக்கே... கண்ணாடி போட்ட கூண்டு. என்னடா இது புதுசா, பார்த்ததே இல்ல என படுக்காளி கண் விரித்து பார்க்கிறேன்.

இன்றைய தலைமுறைக்கு இது புதுசு கண்ணா புதுசு. முழுவதும் செண்ட்ரல் ஏசி செய்யப்பட்டு, வர்க்க பேதமே இல்லாத இன்றைய தியேட்டர்கள் போல் அல்லாது, அதற்கு முந்தைய வேர்ஷன் தான் இந்த பார்ட்லி ஏசி....

தியேட்டரின் ஒரு பகுதியை மட்டும், குளிருட்டி ஒரு விண்டோ ஏசியில் மேட்டர முடித்த சமாச்சாரம் தான் இது. மொத்த இருக்கைகளே இருபது முப்பது தான். கும்மென்று குளிர், குந்தும் இடத்தில் கூடுதல் பஞ்சு. ஒரு 20% கூடுதல் கட்டணம். என்னதான் இருக்குது என்று சொல்லி நாங்களும் பார்க்க சென்றோம்.

நுழைந்தவுடனேயே, சில்லென குளிர், புழுங்கிய ஆனால் நல்ல ஒரு மணம். உடலும் மனமும் சிலிர்க்க ஒரு அற்புத அனுபவம். ம்.. சூப்பர். நல்லா இருக்குது. பார்வையை சுற்றிய போது, பூரா மேட்டுக்குடி ஆள்கள். நறுவிசாய் உடை உடுத்தி, நேர்த்தியாய் தலை சீவி, வாசனை திரவியங்களோடு பூமிக்கு வலிக்க கூடாது என்பதாய் மெதுவான நடை.

குடும்பமும் குட்டிகளாய் வந்தால் கூட, வால்யூமை மியூட்டில் வைத்தது போல் இருந்தது.
அதிர்ந்து பேசாமல், வாய் பிளந்து மீசைக்கு உள்ளேயே பேச்சுக் குரல்கள். அவர் பேசுவது அடுத்தவருக்கு கேட்காது. அமைதி.

சபை மரியாதை கருதி, நம்மளும் அமைதியாகவோ அல்லது மெதுவாகவோ பேச வேண்டிய நிர்ப்பந்தம். படம் போடப் போகிறேன் என்பதற்கு ஆப்பரேட்டர் தரும் சமிக்கை,
ஒன்று உண்டு. அதாகப்பட்டது, தியேட்டரின் சைடு விளக்குகளை அணைத்து விட்டு, நட்ட நடு செண்டரில் மையமாக (அடேயப்பா... ) ஒரு விளக்கை ஆன் செய்வார்.

திரை மூடியிருக்கும் அந்த வெல்வெட் ஸ்கீரினை இழுத்து பிடித்திருக்கும் குஞ்சம் விளக்கை எறிய விட்டு, ஒரு ஜக ஜக மியூசிக் கோடு மேலே தூக்கும். ஆங்... படம் போடப் போறாங்கடா என எல்லோரும் நிமிர்ந்து உட்காருவார். உணர்ச்சி வசப்பட்டு, கை தட்டி விசில் அடித்து ஆரவாரமும் உண்டு.
ஏசிக்குள்ளே.... அதே மியூட் வால்யூம் கண்டினியூ ஆகிறது. ஒரு சத்தமும் இல்லை, உச்சகட்ட ரியாக்‌ஷனாக நிமிர்ந்து சிலர் உட்காருகிறார்கள். அவ்வளவுதான். கீழே இதே செய்கைக்கு விசில் காது கிழியும், கை தட்டல் நிமிர வைக்கும். ஒ...... எனும் ஒசை கூட சில நேரம் உண்டு. கண்ணாடி கதவு வழி வரும் மெல்லிய ஆரவார ஓசை கேட்ட்தும் லேசாய் உதடு சுழித்து எரிச்சல் காட்டுவார். நம் ஏசிக்காரர்கள்.... கூடுதலாய்.... ’ஃப்ரெண்ட் பெஞ்ச் பிரெண்ட்ஸ்’ என்று அடுத்து அமர்ந்து இருக்கும் அவர் ஆளின் தோள் சாய்ந்து சொல்லுவார்.

படம் ஆரம்பித்த்தும் ஒரு சத்தம் கேட்காது. சிரிக்க வேண்டிய இடத்தில் புன்முறுவல் அதிகபட்சம். இல்லை என்றால் ஒரு பார்வை அந்த ஒரே பார்வை தான் படம் முழுக்க. யாராவது பக்கத்தில் உள்ளவர் அதிர்ந்து சிரித்தால், தலை திருப்பி பார்ப்பார், யாரு நம்ம ஹைகிளாஸ்,

முறைக்க கூட மாட்டார், உணர்ச்சியே இல்லாமல் ஒரு பார்வை சிரித்தவரை நோக்கி அவ்வளவுதான் ‘என்ன இது சின்ன பிள்ள தனமா இருக்கு’ என்பது அவரது பார்வையின் பொருள். ஏதோ சத்தம் போடாமல் அவர் போல் இருப்பது தான் சரி என்றும், சத்தம் வந்தால் அது கொலை குற்றத்துக்கு சம்மானது போலவும் அவர் நடந்து கொள்வார்.

சிரித்தவர் பாவம் டக்கென்று வாய் மூடிக் கொள்வார். வெற்றி பெருமித்த்தில் நம்மாள் திரையை வெறிக்க தொடங்கி விடுவார்.

அட போங்கப்பா, செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்த மாதிரி இது என்ன இம்சை, என்று அடுத்த முறை லோ கிளாஸ் வந்து விட்டேன். ஆரவாரமாய் என்னை சுற்றிய சப்தம் புல்லரிக்க செய்தது. சிரிப்பில், அழுகையில், கை தட்டலில், ஏன் ஓ என்ற மறுதலிப்பில் என ரசிகனின் ரசனை புரிந்த்து.

தன் உணர்வை உரக்கச் சொல்லுபவன் யதார்த்த வாதி, கொடுத்து வைத்தவன். மற்றவர் உணர்வோடு தன்னையும் கலந்து கொள்பவர் மனித நேயம் மிக்கவர். ஊருக்காக, தன் உணர்ச்சியை அடக்கி ஆள்பவன் துரதிருஷ்டசாலி.

தன் உணர்வை உரக்க சொல்லுபவன், சக மனிதனின் கூச்சல் எனை தொந்தரவு செய்யாது என நினைப்பவன், இன்னும் ஒரு படி மேலாய் அது எனக்கும் சொந்தமாகும் எனும் போது இது தான் பெட்டரோ.

நான் லோ கிளாஸ், மேலும் இப்படி இருக்கவே ஆசைப் படுகிறேன். நீங்கள் எப்படி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக