பக்கங்கள்

வண்ணான் வரதன்




கருத்த மேனி. கல் போலே இறுகிய உடற் கட்டு. நான் வசித்த நகரத்தின் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அவன் குடித்தனம்.

அவன் அகராதியிலே துணிக்கு இரண்டு பெயர். அழுக்கு மற்றும் வெள்ளை. துவைத்த பின் துணிகளுக்கு அப்படி ஒரு பெயர், வர்ணம் பற்றி கவலை இல்லை துவைத்த பின் துணிக்கு பெயர் வெள்ளை.

அழுக்கு துணி பொதியும், வெளுத்து வைத்த வெள்ளையும் தூக்கி தூக்கி ஒரு பக்கம் சரிந்து நடப்பான். சின்ன ஐயா என்று மரியாதையாய் அழைப்பான். அந்த அழைப்பில் அன்றே எனக்கு கர்வம். என் அண்ணன் என் கூட இருந்தால் சின்ன ஐயா தம்பி என்பான்.

ஒரு முறை வந்தால் அவன் மறு முறை வர எப்படியும் ஒரு மாதம் ஆகும். சில நேரம் இரண்டு. இத்தனை கால தாமதம் என்பதால் அவனிடம் அழுக்கு போட ஒரு அச்சம். அரசியல் வாதி போலே எப்போதும் வாக்குறுதி தருவான். இந்த முறை அடுத்த வாரம் வருவேன் என்று.
நம்பி துணி போட்டால் அதோ கதி தான், அதே கதை தான்.

நம் துணிகள் சில நேரம் காணாமல் போகும். சோகத்துடன் வீட்டு முற்றத்தில் நின்று அந்த பிரச்சினையை சமாளிப்பான். நம் திட்டுகளை அமைதியாய் ஏற்றுக்கொண்டு மௌனமாய் போர் புரிவான். துணிகள் சில நேரம் மாறும். ஆச்சி செல்லமாய் அதற்கு பெயர் வைத்தார் வரதன் வீட்டு சீதனம்.

என்றாலும் பாவம்.

எப்போதும் அட்வான்ஸ் காசு வாங்கி விடுவான். வீட்டில் கறாராய் முடிவு செய்வார். இந்த முறை சலவை துணி குடுக்க கூடாது, அட்வான்ஸ் கழித்து கொண்டே பணம் செட்டில் செய்ய வேண்டும் என்று. என்றாலும் முடியாது. அவன் இரக்கம் எங்களை வெல்லும்.
துணி பொதி இறக்கி வைத்த உடன் தன் குடும்ப சுமை இறக்கி வைப்பான். இறைவன் இரக்கமில்லாதவன் என்பதாய் தோன்றும். அரை விலைக்கு விற்க முடிவு செய்த பள்ளி புத்தகத்தை, அவன் குழந்தைகளுக்கு இலவசமாய் குடுப்போம். இனி மேல் உடுத்த முடியாது, என்று கை பிடி சேலையாய் உரு மாறும் உபயோகம் மாறும் சட்டைகள் சேலைகள் அவர்கள் வீட்டின் உடுமாத்துக்கு என செல்லும்.
ஒரு முறை வீட்டிக்கு வந்த போது, கொல்லையில் உள்ள துவைக்கும் கல் சென்று, நாங்கள் தடுத்தும் எங்கள் துணிகளை சலவை செய்தான். எங்களால் முடியாத முரட்டு போர்வையை காலில் அண்டை கொடுத்து கையால் முறுக்கி புழிந்தான். தும்பை பூவாய் எங்கள் துணிகள் மாறின. அந்த செய்கைக்கு, எங்கள் வீட்டின் உணவை மட்டும் கூலியை பெற்றான்.
எத்தனை துணி, எவ்வளவு பணம் என்ற கணக்கு வழக்கு தெரியாது. குடுத்ததை வாங்கி கொள்வான். தேவைக்கு கேட்பான். நாங்களே முடிவு செய்ய வேண்டும், என்று விலை உயர்வு செய்ய வேண்டும் என்று.
அவன் மனைவியை பார்த்து இருக்கிறேன் அவன் குழந்தைகளை பார்த்து இருக்கிறேன். அவர்கள் குடும்பத்தின் வருமானம் நாங்கள். முக்கியமான வாடிக்கையாளர் நாங்கள். வியாபாரம் இல்லாது மனிதாபிமானத்தின் அடிப்படையில் ஒரு உறவு.

சரித்திரங்களில் மாத்திரமே வாசித்து இருந்த வாழ்கை போலே தோன்றும். அவன் வாழ்வின் நோக்கம் என்ன.

இன்று

வியாபாரம் என்று உணராது அடிமையாய் அவன் சிந்தித்த எண்ணம் கோபம் கொள்ள செய்கிறது. என் பெயர் சொல்லி கூப்பிடாத, எங்கள் வீட்டின் நடு வீட்டுக்கு செல்ல இயலாத சாதிய நிலை ஆத்திரம் கொள்ள வைக்கிறது.

இன்று பார்க்காத வரதனை நினைக்கும் போது நிம்மதி வருகிறது. இன்றும் கிராமங்களில் இப்படி உண்டோ என்று கேள்வி வருகிறது.


2 கருத்துகள்:

  1. எனக்கு தெரிந்த ஒரே வரதன் - வால்பாறை வரதன்

    அவன், படுக்காளி சொல்வது போல் அவ்வளவு நல்லவன் இல்லை. பாருங்களேன், அவன் கூட்டாளிகள் யாரென்று.

    கொண்டித்தோப்பு கெடா குமார்
    காடு வெட்டி குரு
    கள்ளத்தோணி கஜா

    பதிலளிநீக்கு
  2. வண்ணான் வரதன் ஒரு அற்புதமான பதிவு.

    என் கண்கள் குளமாகி கண்ணீர் பீறிட்டுக் கிளம்புகிறது.

    வர்க்க பேதம் பற்றியும் சாதி வேறுபாடுகள் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதினாலும் புரிய வைக்க முடியாததை ஒரே பத்தியில் சம்மட்டி அடி போல புரிய வைத்து விட்டீர்கள் .

    வயதில் பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்கக்கூடாது என்று கற்றுத்தந்த பெரியோர்கள் அவனை "நீங்கள்" என்று அழைப்பதை தடுத்த பொது தான் சமூகவியலில் முதல் பாடத்தைக் கற்றுக் கொண்டேன்.
    இந்த முரண்பாட்டின் தாக்கம் தான் தர்க்க ரீதியான நமது சிந்தனைகளுக்கு முதல் பொறி.

    நாம் நமது குழந்தை களுக்கு நம்மை அறியாமலே இப்படி ஏதாவது தவறான கருத்துகளைப் பரப்புகிறோமா என்று என்னைத் தீவிரமாக சிந்திக்க வைத்து விட்டீர்கள்

    உங்கள் இந்த பதிவை குழந்தைகளோடு இன்றே விவாதிப்பது தான் அவர்களுக்கு நற்சிந்தனை ஊட்டும் நல்ல வழி என எண்ணுகிறேன்.

    சமுதாய சீர் திருத்தத் தீக்கு அக்கினிக்குஞ்சு தந்த உங்கள் சீரிய சிந்தனைக்கு நன்றி

    பதிலளிநீக்கு