பக்கங்கள்

காணும் பொங்கல்

அலுவலக வேலை - நேரமின்மை என்று, சோம்பேரித்தனத்துக்கு தங்க முலாம் பூச முயற்சி செய்த போது, அண்ணன் கட்டளை எனை எழுத தூண்டியது . நன்றி .

காணும் பொங்கல் .

கரி நாள் , ஏன் இந்த பெயர் வந்தது … தெரிந்தால் சொல்லுங்களேன் .

பொங்கல் கொண்டாடிய எல்லோரும் நிச்சயம் எடுக்க வேண்டிய முடிவு பயணம் செல்வது. பண்டை தமிழரின் நிலாச்சோருநிகர்த்த நிகழ்வு.

கடமைக்காய் குடும்பத் தலைவர் ஒரு நாள் வெளியில் செல்லும் ஆசையோடு - சுதந்திரக் காற்றுக்காய் குடும்பத் தலைவி, அடுத்த வீட்டு மல்லிகா புடவையும் தெரிந்து விடும் எனும் நப்பாசையோடு. பருவத்தின் வாயிலில் உள்ளோர்கள் விளம்பரப் படுத்தும் குதுகூலத்துடன்.

முயல் தீவு, சிங்காரத் தோப்பு, கோரம் பள்ளம், ரோச் பூங்கா, கட்டபொம்மன் கோட்டை என மற்ற நாட்களில் மறந்திருந்த இடங்கள் எல்லாம் இன்னிக்கு மவுசு.

வருடம் பூரா மீன் பிடித்த படகு இன்று பயணிகள் வாகனம் ஆகும். ஸ்பெஷல் பஸ் - பேருந்து நிலையத்தை நிறைக்கும்.

முந்தைய நாள் வெண் பொங்கல் இன்று புதிதாய் பாத்திரத்தில் இடம் பிடிக்கும். புலால் உண்ணும் கூட்டத்தின் சாப்பாட்டு பொதியில் வருத்த கரி மூக்கை துளைக்கும். எப்போதும் சண்டை உண்டு - சோத்து மூட்டை தூக்க. தூக்கி வீச ஏதுவாய் பொதி தயார் செய்ய சொன்னாலும், அம்மா எப்போதும் பாத்திரத்திலே அடைத்திடுவார், ஆத்திரமாய் வார்த்தை வரும் .
சீக்கிரமாய் கிளம்ப வேண்டும் நல்லதாய் இடம் பிடிக்க என்றாலும், எப்போதும் தாமதம் ஆகும்.

போகின்ற வழி எல்லாம் சந்தோசமாய் மனிதர்கள். நாம் தீர்மானித்த இலக்கு அடுத்தவர் ஆலோசனையில் கேள்வியாய் நிற்கும்.
"தண்ணி வசதி சரி இல்லை அதான் முயல் தீவு போகாம கட்டபொம்மன் கோட்டை”
பேருந்து நிலையத்தில் மறுபடியும் சோதனை. நாம் செல்ல வேண்டிய இலக்கில் பேருந்து குறைவாய் இருக்கும் அல்லது மிகுந்த கூட்டத்தோடு இருக்கும்.

தொலைவில் தெரியும் நமக்கான பேருந்து. பர பரப்பு உடம்பில் தொற்றும். உட்கார இடம் தேடி, உதிரம் உட்சத்தில் ஓடும். இடம் கிடைத்து பெரு முச்சு வரும் போது உலகையே வென்றதாய் இருக்கும்.

இடம் கிடைக்காது நிற்கின்ற சக பிரயாணிகளை பாவமாய் பார்க்க தோன்றும். சில சமயம் சிக்கல். தெரிந்தவராய் இருந்து, நிற்கும் தகுதியை கடந்து இருந்தால் நம் சீட் பறி போகும்.
ஓடாத பஸ்சில் - தூசியான காலடியில், உணவை வைக்க மனம் இல்லாது மடியிலே வைக்க நேரிடும். சில சமயம் சுடும்.
பேருந்தின் வயிறு பிளந்து காக்கி சட்டை ஓட்டுனராய் அமர ஆறுதல் ஓலமிடும். உடம்பெல்லாம் விரைப்பாகும்
அடித்து வீசும் முரட்டு காற்று வியர்த்த தேகத்தில் இன்பமாய் படரும். பயணசீட்டு வழங்க வேண்டி ஊர் எல்லையில் நிற்கும்போது சுத்த காற்று உத்வேகம் தரும். விடுமுறை நாளிலும் வேலை செய்யும் ஓட்டுனர் நடத்துனர் அவர் தம் குடும்பம் என இறக்கம் எட்டி பார்க்கும்.
இலக்கை அடைந்ததும் நல்ல இடம் தேடி கண்கள் அலையும். தேர்வு செய்த இடத்தில் அரை மனதாய் போர்வை விரிக்க படும். துவைக்கும் கடினம் தோன்ற அக்கரையாய் அம்மா பார்பார். விரித்து வைத்த போர்வையிலே, மர நிழலிலே நம் இருப்பு நிச்சயம ஆகும். இனி இது நம் இடம், நாம் எழுந்து செல்லும் வரை. சக மனிதர் சுற்றி இருப்பார்.
குடும்பம் இணைத்திடும் இன்பமாய் அன்பிலே. நேற்று போட்ட சண்டை கூட இன்று மறந்திடும். இது நம் குடும்பம் என்று பெருமையாய். சோத்து பொட்டலம் பிரிக்கலாமா என்று பெரிசுகள் சொல்லும். இளம் சொட்டு உறுப்பினர் எல்லாம் ஒரு நடை செல்ல ஆசை படுவார் . எச்சலுக்கு ஆசை பட்டு நாய்கள் கூட நம்மருகில்.

புதிய சூழ்நிலையில் சாப்பாட்டின் சுவை கூடும். பறந்து வரும் தூசிகூட எளிதாக மறந்து போகும். அடுத்த வீட்டு சாப்பாட்டு நம்மை விட நல்லதாய் தோன்றும்.
ஒரே உடையில், சீருடையாய் கூட்டமாய் திறிந்திடுவார், தனி மனித அடையாளமோ அங்கிகாரமோ வேண்டாத / விரும்பாத சில காளைகள்.
சுற்றுலா வந்தாலும் கடமையாய் ரேடியோ கேட்கும் சிலர், கேட்பது தங்களுக்காகவா அல்லது பிறர் பார்க்க வேண்டும் என்பதற்கா
நெருங்கிய நண்பர் என்றாலும் குடும்பத்தை அறிய மாட்டோம் . இன்று அறிமுகம் கிடைக்கும்.

சிலருக்கு காதல் பூக்கும், பூத்த காதல் சிலருக்கு மலரும், சந்தோஷமான மனதில் நல்லதே நடக்கும். கனவில் உள்ள தேவதையை சிலர் இங்கு தான் இன்று தான் காணுவர், நாளையில் இருந்து அவன் நாற்பது நாட்களுக்கு காதல் கவிதை எழுதி திளைப்பான். வெகு காலமாய் முயன்று வரும் தன் காதல் சிலருக்கு தோற்கும். தன் நாயகியை வேறு ஒருவரோடு காண்பார், நாளை முதல் தாடி வளர்ப்பார். அவரும் கவி யாவார்.

சூரியன் மேற்கில் சாய மெதுவாய் கிளம்பி வீடு வந்து சேருவோம், அடுத்த முறை பயணம் எங்கே என்று அன்றே தீர்மானிப்போம்.

நாளை அலுவல் நோக்கி ஆவலாய் காத்திருப்போம், அடுத்த முறை ஆயதங்கள் மறுபடி இனிமை சேர்க்கும்.

1 கருத்து:

  1. "அதிகம் இனிப்பானது எது ?
    பொங்கலா ?
    பொங்கலைப் பற்றியும், காணும் பொங்கலைப் பற்றியும் படுக்காளியின் பதிவுகளா ?"

    சாலமோன் பாப்பையாவுக்கும் திண்டுக்கல் லியோனிக்கும் சொல்லி அனுப்பி இருக்கிறோம்.

    தங்கு தடையில்லா பொங்கு தமிழில் ...
    சொந்த உணர்வுகளின் சந்த நடையில் ...
    புன்னகை மலர்விக்கும் நகைச்சுவை எழிலில் ...
    ஆழ்ந்த கருத்துக்களின் சிந்தனைத் தெளிவில் ...

    படிக்கப் படிக்கத் தித்தித்தது
    பல நினைவுகளைப் புதுப்பித்தது
    நன்றி !!

    பதிலளிநீக்கு